தமிழ் இலக்கணம் - பாகம் 1
உள்ளடக்க அடைவு
1. அறிமுகம்
வணக்கம், தமிழ் இலக்கண குறிப்புகளை எளியமுறையில் தெரிந்து கொள்வதற்காக இவ்வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து இலக்கணங்களைக் கற்றுக்கொண்டும் குறிப்பெடுத்தும் இங்கு தொகுக்கப்படுகிறது. மேலும் இங்கு இலக்கண விளக்கங்கள் தேவையான அளவோடு மட்டுமே இருக்கும். நன்றி!
2. தமிழ் இலக்கணம்
தமிழ் மொழி இயல் இசை நாடகம் என மூன்று பிரிவுகளை உடையது. இதுவே முத்தமிழ் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் முன்னோர் இம்மூன்றிற்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது தற்போது இயற்றமிழ் இலக்கணத்தையே குறிக்கிறது. செய்யுள் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழ். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூலாகும்.
2.1 தமிழ் மொழியின் இலக்கண வகைகள்
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து. அவையே ஐந்திலக்கணம் எனப்படும். அவைகள் முறையே
- எழுத்து
- சொல்
- பொருள்
- யாப்பு
- அணி
3. எழுத்து
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவம். நாம் காதில் கேட்கும் ஒவ்வொரு ஒலிகளுக்கும் ஓர் அடையாளமிட்டால் அதுவே ஓர் எழுத்தாகும். எழுத்தின் ஓசை எழுப்பப்படும்போது ஒலி வடிவத்தையும் எழுதும்போது வரி வடிவத்தையும் கொண்டிருக்கும்.
நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துகள் உண்டு.
3.1 தமிழ் எழுத்துகள்
- உயிர் எழுத்துகள்
- மெய் எழுத்துகள்
- உயிர்மெய் எழுத்துகள்
- ஆய்த எழுத்து
3.1.1 உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மை காற்று. இயல்பாக காற்று வெளியிடும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றது. வாயை திறத்தல் உதடை விரித்தல் குவித்தல் ஆகிய எளிய செயலால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகள் பிறக்கின்றது.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
- குறில்: அ, இ, உ, ஏ, ஒ - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கும்
- நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கும்
3.1.2 மெய் எழுத்துகள்
இங்கு மெய் என்பது உடம்பு எனப் பொருள்படுகிறது. க் முதல் ன் வரையுள்ள பதினெட்டு மெய் எழுத்துகள் ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாது.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- வல்லினம்: க், ச், ட், த், ப், ற் - வன்மையாக ஒலிக்கும்
- மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் - மென்மையாக ஒலிக்கும்
- இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் - வன்மையும் இல்லாமல், மென்மையும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கும்.
3.1.3 உயிர்மெய் எழுத்துகள்
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் இந்த இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகிறது. இவற்றுள் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகையுண்டு.
உயிர் + மெய் = உயிர்மெய்
எடுத்துக்காட்டு:
- க் + அ = க
- ச் + இ = சி
- த் + ஊ = தூ
- ப் + ஐ = பை
- ம் + ஆ = மா
3.1.4 ஆய்த எழுத்து
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைத் தவிர்த்து ஃ என்னும் ஒரு ஆய்த எழுத்து ஒன்று உண்டு.
3.2 தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்
| ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
| ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
| ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
| ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
| ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
| ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
| த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
| ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
| ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
| ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
| ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
| ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
| ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
| வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
| ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
| ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
| ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
| ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
3.3 மாத்திரை அளவு
மாத்திரை என்பது இங்கு எழுத்துகளை ஒலிக்கக்கூடிய கால அளவைக் குறிக்கும். ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ அல்லது ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 1 மாத்திரை
- நெடில் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 2 மாத்திரை
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு: 1/2 (அரை மாத்திரை)
- மெய் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 1/2 (அரை மாத்திரை)
3.4 எழுத்துகளின் பிறப்பு
தமிழ் எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை எழுத்துகளின் பிறப்பு என்னும் ஒரு தனித்த வலைப்பதிவில் காண்போம்.